பார்வை ஒன்றே போதுமே!
- டாக்டர்.
ஆர்.கார்த்திகேயன்
மஹா பெரியவர் என அழைக்கப்பட்ட காஞ்சி சங்கர மட ஸ்ரீ சந்திரசேகர சுவாமிக்கு இரண்டாம் கண்ணிலும் காடராக்ட் பாதிப்பு என்று அழைப்பு வருகிறது. முதல் கண் ஏற்கனவே முற்றிலும் பார்வை இழந்திருந்த நிலையில் இந்த சிகிச்சை மிக முக்கியமானது. தலை குளிக்காமல் இருக்க வேண்டும் என்கிற மருத்துவ அறிவுரையை தன் பூசை புணசஸ்காரத்திற்காக மீறியதால் முதல் கண் பார்வை பறி போனது. மஹா பெரியவரை யார் நிர்பந்திக்க முடியும்? தவிர யார் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதே அவர் முடிவு செய்வதாயிற்றே!
அவர் தேர்ந்தெடுத்த கண் மருத்துவர் டாக்டர்.பத்ரிநாத்.
பரிசோதித்துப் பார்த்ததில் அறுவை சிகிச்சை அவசியம் என்று தெரிகிறது. சுவாமியும் சம்மதிக்கிறார். வரதராஜப் பெருமாள் கோயில் அருகே ஒரு மண்டபம் அவசரமாக அறுவை சிகிச்சை மையமாக மாறுகிறது.
தன் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல், எல்லாம் முறைப்படி செய்கிறார்.
சிகிச்சைக்கு பின்னும் தினசரி தானே நேரில் சென்று மருந்து இட்டு பார்த்துக் கொள்கிறார். எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்த சுவாமி சொல்கிறார்: “ என் கண் சரியானால் தான் அவர் மருத்துவத் தொழில் செழிக்கும். இல்லாவிட்டால் தேவையில்லாத அவப்பெயர் வரும். அதனால் தான் பூரணமாக ஒத்துழைத்தேன்!”
“அந்த பூரண ஒத்துழைப்பு மட்டுமல்ல, அன்பும் ஆசீர்வாதமும் தான் “சங்கர நேத்ராலயா” துவங்க வைத்தது. இன்று தழைக்க வைத்துள்ளது” என்கிறார் டாக்டர் பத்ரிநாத்.
வி.வி.ரங்கனாதன், ஜார்ஜ் ஸ்காரியா மற்றும் மீரா பிரசாத் எழுதியுள்ள “ In- Sight: Sankara
Nethralaya’s Passion for Compassion” என்கிற இந்த புத்தகம் சங்கர நேத்ராலயாவின் சரித்திரத்தை சொல்லும் முயற்சி.
“என் சரிதை எழுதுவதாக இருந்தால் புத்தகமே வேண்டாம்” என்று தீவிரமாக இருந்தவர் நேத்ராலயா பற்றிய புத்தகம் மட்டும் என்றபோது தான் சம்மதிக்கிறார். அதுவும் அனைவரையும் பேட்டியெடுத்து போடச்சொன்னார்.
என் பார்வையில் இது ஒரு நிர்வாகப் புத்தகம்.
ஒரு சமூக நோக்கமுள்ள நிறுவனம் எப்படி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பற்கான ஆவணம்.
இன்று Social Entrepreneurship என்பது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நிறுவன வகை. தொண்டு நிறுவனங்கள் வியாபார நிறுவனங்களைப் போல திறமையாக செயல்படுதல் இதன் சிறப்பு.
சங்கர நேத்ராலயா இந்த வகையை சேர்ந்த நிறுவனம் என்பதால் இந்த புத்தகத்தை ஆய்வு செய்தல் அவசியம்.
1978ல் துவங்கிய நிறுவனம் இன்று ஆலமரமாய் வளர்ந்து மருத்துவ சிகிச்சை, ஆராய்ச்சி, கல்வி, தொழில் நுட்பம், சமூகப்பணி என இன்று ஒரு பெரும் மக்கள் நல இயக்கமாக வளர்ந்துள்ளது.
எப்படி வந்த்து இந்த வளர்ச்சி?
பல்கிவாலாவின் வார்த்தைகளில் சொல்வதானால் “சங்கர நேத்ராலயாதான் நான் பார்த்ததிலேயே மிக சிறப்பாக இயங்கும் மிக சுத்தமாகவும் உள்ள மருத்துவமனை!” தன் சொத்தில் இவர் இரண்டு கோடி எழுதி வைத்ததற்கும், டாடா குழுமத்திற்கு நன்கொடை அளிக்க பரிந்துரைத்தற்கும் நேத்ராலயாவின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம்.
ஒரு வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு தேவையான அனைத்தும் நேத்ராலயாவில் உள்ளது புத்தகம் படிக்கையில் தெரிகிறது.
சரியான தலைமை, தலைவரின் தெளிவான பார்வை, மக்களை “முன் மாதிரி”யாக வழி நட்த்தல், தொழில் திறன், சந்தை பற்றிய அறிவு, மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ளுதல், சமரசம் செய்து கொள்ளாத அடிப்படை விழுமியங்கள், ஒளிவு மறைவு இல்லாத வழிமுறைகள்...இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
சில எண்ணங்களும் செயல்பாடுகளும் குறிப்பிடத்தகுந்தது.
மிக ஆரம்ப காலத்திலேயே தனியுரிமை தவிர்த்து, டிரஸ்ட், சொசைட்டி என பிறர் கண்காணிப்பில், ஆதரவில் மருத்துவ மனையை வளர்க்க நினைத்தார் டாக்டர். பத்ரிநாத். அதே போல் மற்ற கண் மருத்துவமனைகளை போட்டியாளர்களாகப் பார்க்காமல் எல்லாருடனும் கூட்டு செயல்பாடுகளை ஊக்குவிக்கிறார். அணுகுமுறையில் நேர் எதிரான அப்போலோ மருத்துவ மனை அதிபர் டாக்டர் பிரதாப் ரெட்டி இவருக்கு சிறந்த நண்பர்.
இந்த மருத்துவமனயில் சிகிச்சை பெற்றவர்களில் பிரபலங்கள் பட்டியல் ரொம்ப நீளம். எம். எஸ். சுப்புலட்சுமி நிதி திரட்டுவதற்காக பாடியிருக்கிறார். உலகப் புகழ் நிர்வாக மேதை சி.கே.பிரகலாத் நேத்ராலயாவிற்கு நிதி திரட்ட அமெரிக்காவில் உரை நிகழ்த்தினார். ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் படம் எடுத்து கொடுத்துள்ளார்.
புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் டாஃபே மல்லிகா ஸ்ரீனிவாசன், எல்
& டி நாயக், ஹெச்.எஃப்.டி.சி. தீபக் பரேக், தி இந்து முரளி, பார்த்தி மிட்டல், அப்போலோ பிரதாப் ரெட்டி என கனமான மனிதர்களின் கனமான பங்களிப்பு. ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ படிக்கிற உணர்வு.
உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் மற்றும் மனிதர்களின் தொடர்போடும் ஆதரவோடும் ஏழை இந்தியாவின் பார்வை ஒன்று மட்டுமே தங்கள் இலக்கு என தொண்டு புரிகிறது நேத்ராலயா.
வருங்கால சவால்களையும் அலசுகிறது புத்தகம். தொழில் நுட்பமோ, நிதியோ, சேவை முறைகளோ நிஜமான சவால்கள் அல்ல. மனித வளம் தான் வருங்கால சவால் என்கிறது.
டேவிட் போர்ன்ஸ்டென் “சமூகத் தொழிலதிபர்கள் (social entrepreneurs) ” பற்றி கூறுகையில் அவர்களுக்கு 6 குணங்களை ஆதாரமாக்க் கூறுகிறார்:
தன்னை திருத்திக் கொள்ள/மாற்றிக் கொள்ள எப்பொழுதும் தயாராக இருத்தல
வருவதை பங்கிடத் தயாராக இருத்தல
பழைய நிறுவன கட்டமைப்புகளிலிருந்து விடுபடுதல
மற்ற துறையினருடன் உறவாட தயாராக இருத்தல
அமைதியாக ஆராவாரம் இல்லாமல் பணியாற்றல
அப்பழுக்கில்லாத ஒழுக்கம் காத்தல
இவை அனைத்தும் சங்கர நேத்ராலயாவிற்கும் டாக்டர் பத்ரி நாத்திற்கும் பொருந்தும்.
ஒவ்வொரு சமூக பணியாளரும் தொழில் முனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
சமூகத்திற்கு உதவும் பிசினஸ் ஐடியா உள்ளதா? ஒரு முறை சங்கரா சங்கரா என்று நேத்ராலயாவை சுற்றிப் பாருங்கள்.அல்லது இந்த புத்தகத்தை படியுங்கள்!
No comments:
Post a Comment